அன்னூர்;குமரன் குன்றில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரன் குன்றில் பிரசித்தி பெற்ற கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
4ம் தேதி வரை தினமும் காலையில் வள்ளி தெய்வானை சமேதரராக கல்யாண சுப்பிரமணிய சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7 30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்பட பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேருக்கு முன்னதாக சிறிய விநாயகர் தேர் சென்றது. இரண்டு ஜமாப் குழுக்களின் இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனம் ஆடியபடி முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பிய படி சென்றனர். அன்னதானம் வழங்கினர்.
மேட்டுப்பாளையம்
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட, குழந்தைவேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தேரோட்டம், வெகு விமர்சியாக நடைபெறும். கொரோனா நோய் தொற்றால், கடந்த இரண்டு ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேரை பராமரிக்காததால், இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை.
அதனால் சப்பரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுத சுவாமி எழுந்தருளினார். பின்பு மாலை, 6:35 மணிக்கு, சப்பரத்தில் மலையை சுற்றி சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சப்பர ஊர்வலத்தில், மலையை சுற்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த, ஜமாப் குழுவினர், மேளம் அடித்தும், இளைஞர்கள் ஆடிச் சென்றனர்.
இவ்விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பா.ஜ., விவசாய அணியினர் உள்பட பல்வேறு அமைப்பினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செய்து வருகிறார்.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு பஞ்சமுக விநாயகர், விஷ்ணு, துர்க்கை, இடும்பன் தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன.
இங்கு தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு கல்லாங்காடு விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் அழைத்து வருதல், 9:00 மணிக்கு மேல் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா ஜமாப் நிகழ்ச்சியுடன் நடந்தது.
மதியம் அன்னதானம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
குமரன் குன்றில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடந்ததால் பக்தர் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. எனவே அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து குமரன் குன்று வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஒன்றரை மணி நேரம் ஸ்தம்பித்தன. இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் எதுவுமே செல்ல முடியவில்லை. பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.