மேட்டுப்பாளையம்;காந்தை ஆற்றில் தண்ணீர் குறைந்து வருவதால், உடனடியாக ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே, லிங்காபுரத்திற்கும் காந்தவயலுக்கும் இடையே, காந்தை ஆறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு, ஆற்றின் உயரத்தை மையமாக வைத்து, புதிய பாலம் கட்டப்பட்டது.
அப்போது லிங்காபுரம் விவசாயிகள், பவானிசாகர் அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்பொழுது, இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி விடும். அதனால் பாலத்தை உயர்த்தி கட்டும்படி கூறினர். ஆனால் அப்போதைய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், குறைவான உயரத்தில் பாலம் கட்டினர்.
திறப்பு விழா காணும் முன்பே, பவானிசாகர் அணை நிரம்பியதால், அணையின் நீர் தேக்க தண்ணீரில், புதிய பாலம் மூழ்கியது. பாலத்தின் மீது ஆறடிக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் பாலம் கட்டியும், பொது மக்களுக்கு பயனில்லாமல் போனது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், ஆழியாறு அணையில் இருந்து, மோட்டார் படகு கொண்டு வந்து, காந்தை ஆற்றில் இயக்கியது. பரிசல் மற்றும் படகு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரோட்டை உயர்த்தி, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும்படி, அரசுக்கு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காந்தை ஆற்றின் குறுக்கே, 14 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்ட, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலம் டெண்டர் விடும் முன்பு, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பியது.
அதனால் கடந்த ஆறு மாதங்களாக, காந்தை ஆற்றில் தண்ணீர் தேங்கி நின்றது. பரிசல் மற்றும் படகில் மக்கள் பயணம் செய்து வந்தனர். ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்ததால், உயர் மட்ட பாலம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, ஏழு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து லிங்காபுரம் காந்தவயல் பகுதி மக்கள் கூறியதாவது:
காந்தை ஆற்றில், 25 அடிக்கு தண்ணீர் தேங்கி இருந்ததால் பாலம் கட்டவில்லை. பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால், காந்தை ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக அரசு உடனடியாக உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும்.
ஜூன் மாதம் கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் பருவமழை சீசன் துவங்கும். கனமழை பெய்தால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அணை நிரம்பினால், காந்தை ஆற்றில் பாலம் மீண்டும் மூழ்கி விடும். அதனால் தமிழக அரசு உடனடியாக உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.
கடந்த,18 ஆண்டுகளில், பத்துக்கு மேற்பட்ட முறை, இப்பாலம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க தண்ணீரில் மூழ்கியே இருந்தது. ஆற்றின் ஒரு பக்கம் லிங்காபுரம், மற்றொரு பக்கம் காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், ஆளூர் என ஐந்து மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவர்கள் பரிசலில் பயணம் செய்து ஆற்றைக் கடந்து வருகின்றனர். அதேபோன்று லிங்காபுரம், சிறுமுகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பரிசலில் ஆற்றை கடந்து, தங்கள் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். மலைவாழ் மக்கள், பள்ளி மாணவர்கள், பாதுகாப்பு இல்லாத பரிசல் பயணம் செய்து வருகின்றனர்.