திருப்பூர்:திருப்பூரில் வரும், 11ம் தேதி நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தகவல் தொழில்நுட்பம், கணினி துறை சார்ந்த நிறுவனங்கள், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கெமிக்கல், ஓட்டல், சுற்றுலா துறை, ஷிப்பிங், போக்குவரத்து, தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் என, 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்கவுள்ளன.
கல்வித் தகுதி இல்லாதோர் முதல் உயர் கல்வி முடித்த, 18 முதல், 50 வயது வரையிலானோர் தங்கள் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்புவோர்,https://tirupurjobfair.inஎன்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர், விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களை https://tnprivatejobs.tn.gov.in/Home/job mela என்ற இணையதளம் மற்றும் 94990 55944 என்ற மொபைல் எண்ணிலும் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.