கூடலுார்:பந்தலுார் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிடிக்கப்பட்ட கும்கிக்கு பெயர் வைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே மூன்று பேரை தாக்கி கொன்ற 'சங்கர்' என்ற காட்டு யானையை, 2021 பிப்., 11ல் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர், முதுமலை அபயாரண்யம் யானை முகாமில் கராலில் அடைத்து பயிற்சி அளித்தனர்.
அதற்கு இதுவரை, வளர்ப்பு யானைகளில் பட்டியலில் சேர்க்க பெயர் வைக்காததால், யானைக்கான முகாம் பதிவேட்டில், சேரம்பாடி 'கேப்சுர் எலிபென்ட்' என, அடையாளப்படுத்தி உள்ளனர். தற்போது தெப்பக்காடு யானைகள் முகாமில் அதற்கு 'கும்கி' பயிற்சி அளிக்கப்படுகிறது. கும்கிகளை பாகன்கள் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். ஆனால், இந்த யானைக்கு பெயர் வைக்காததால் கும்கி பயிற்சி அளிப்பதிலும் சிரமம் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில்,'முகாமில் 'சங்கர்' என்ற பெயரில் ஏற்கனவே வளர்ப்பு யானை உள்ளது. எனவே, இந்த யானைக்கு அந்த பெயர் வைத்து அழைக்க முடியாது. இந்த யானைக்கு பெயர் வைக்க பல பெயர்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில், ஒன்றை தேர்வு செய்து, அரசு அறிவிக்கும் பெயர் யானைக்கு விரைவில் சூட்டப்படும். அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.