புதுச்சேரி : புதுச்சேரியில் வள்ளலார் தினத்தில் தடையை மீறி மதுபானம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளலார் ஜோதி தினத்தை யொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் இயங்கும் கள், சாராயம், மதுபான பார் உட்பட அனைத்து மதுக்கடைகள், மது அருந்த அனுமதித்த ஓட்டல்களில் உள்ள பார்களை மூட வேண்டும்.
மீறுவோர் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலால் துறை எச்சரித்திருந்தது.
இதையொட்டி, நேற்று புதுச்சேரியில் மதுபானம், சாராயம், கள் ஆகிய அனைத்து மதுபான கடைகள் மூடியிருந்தது. இருந்த போதிலும் சிலர் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்றனர்.
இவர்களை பிடிக்க, கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், தாசில்தார்கள் மாசிலாமணி, சிலம்பரசன், சரவணன் ஆகியோர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டது.
தாசில்தார் மாசிலாமணி தலைமையிலான குழுவினர், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர், வில்லியனுார், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது, சோரியாங்குப்பத்தில் கள்ளத்தனமாக மதுபானம் மற்றும் அரியாங்குப்பம், மணவெளி, உருவையாறு, அரியூர் ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, 2 பேரை கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபானம், சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.