புதுச்சேரி, : 'தினமலர்' செய்தி எதிரொலியாக புதுச்சேரியில் லைட் ஹவுஸ் பார்வையிட வரும் 15ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரையில் இரு லைட் ஹவுஸ்கள் உள்ளன. காந்தி சிலையருகே உள்ள பழைய லைட்ஹவுஸ் கடந்த 1836ல் பிரபல பொறியாளர் லுாயிஸ் குயர் என்பவரால் கட்டப்பட்டது.
வம்பாகீரப்பாளையத்தில் கடந்த 1971ம் ஆண்டு லைட் ஹவுஸ் கட்டி முடித்ததும், பழைய லைட் ஹவுஸ் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. இது புதுப்பிக்கும் பணி நடந்தது. வம்பாகீரப்பாளையத்தில் 157 அடி உயரமுள்ள லைட் ஹவுசில் இருந்து நகரின் பரந்த நிலப்பரப்பு, கடற்கரை அழகு, போன்ற காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு வந்து பார்வையிட்டு செல்வர். லைட் ஹவுசில் பார்வையிட ஒரு நபருக்கு ரூ. 10 கட்டணம் பெறப்பட்டது. கொரோனா பரவலுக்கு முன், கடந்த 2019ல் பராமரிப்பு காரணமாக வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் மூடப்பட்டது.
மூன்றரை ஆண்டுகள் கடந்தும் லைட் ஹவுஸ் திறக்காமல் உள்ளதால், புதுச்சேரி மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, வரும் 15ம் தேதி முதல் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள லைட் ஹவுஸ் உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பார்வையாளர்கள் நேரம் மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை, முன்பு அனுமதித்த அதே நேரமே வழங்கப்பட்டுள்ளது.