கள்ளக்குறிச்சி :கல்வராயன்மலை பகுதியில் 1,200 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் எஸ்.பி., மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கரியலுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் மேல்மொழி ஊத்து பள்ளம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 6 பிளாஸ்டிக் பேரல்களில் வைத்திருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். மேலும் மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி., மோகன்ராஜ் எச்சரித்துஉள்ளார்.