திருநெல்வேலி : ஆதிச்சநல்லுார் அருகே வாழ்விட பகுதிகளில் அகழாய்வு பணிகளை, மத்திய தொல்லியல் துறையினர் நேற்று துவக்கினர்.
'ஆதிச்சநல்லுாரில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்' என, 2020 மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள், உடல்களை தாழிகளில் வைத்து புதைக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
மனிதர்களின் வாழ்விட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்களில் ஆய்வு மேற்கொள்ள அகழாய்வு பணி நேற்று துவங்கியது.
திருக்கோளூரில் நடந்த நிகழ்வில், மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் பணிகளை துவக்கி வைத்தார்.
ஏரல் தாசில்தார் கண்ணன், ஆய்வாளர் எத்தீஸ்குமார், தொல்லியல் ஆர்வலர்கள் முத்துக்குமார் முத்தாலங்குறிச்சி காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.