ரூ. 25 லட்சம் மதிப்பில்
வளர்ச்சிப்பணிக்கு பூஜை
பா.ம.க.,வை சேர்ந்த மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், 'இல்லம் தேடி எம்.எல்.ஏ.,' திட்டத்தில், மல்லமூப்பம்பட்டி, எஸ்.கொல்லப்பட்டி ஊராட்சிகளில் நேற்று வீடுதோறும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து கக்கன் காலனியில், 11.50 லட்சம் ரூபாயில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி; மூலக்கடையில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய்; பூனைகரடு மாரியம்மன் கோவில் பகுதியில், 3.50 லட்சம் சார்பில் பேவர் பிளாக் சாலை; நாடார் தெருவில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் என, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு வினையானது
ஆற்றில் மூழ்கி பட்டதாரி பலி
மேட்டூர், கோனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 49. இவரது மகன்கள் அஜித்குமார், 22, மாயக்கண்ணன், 23. பி.இ., பட்டதாரியான இருவரும் நேற்று காலை, 11:30 மணிக்கு உறவினர்களுடன், திப்பம்பட்டி, தொட்டிபாலி காவிரியாற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, 200 மீ., நீள ஆற்றின் கரையை தொட்டு வருவதற்கு விளையாடினர். அப்போது ஆற்றின் நடுவே சென்ற மாயக்கண்ணன் நீந்த முடியாமல் மூழ்கிவிட்டார். மேட்டூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதுகாப்பு கேட்டு
2 காதல் ஜோடி தஞ்சம்
சேலம், சீலநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில் மேடு, ராமையன் காட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு, 27. ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். அவரது வீடு அருகே வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியை ஹரிணி, 25. இருவரும் காதலித்த நிலையில், இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2ல் வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அதேபோல் சேலத்தை சேர்ந்தவர் மிதுன், 26. 'கூரியர்' நிறுவன ஊழியர். சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரீத்தி, 20. தனியார் பழச்சாறு கடையில் பணிபுரிகிறார். இருவரும் காதலித்த நிலையில் நேற்று முன்தினம், திருமணம் செய்து கொண்டனர்.
இரு ஜோடிகளும் நேற்று, பாதுகாப்பு கேட்டு அன்னதானப்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், பெற்றோரை அழைத்து சமாதானப்
படுத்தி அனுப்பி வைத்தனர்.
2ம் நாள்
தேரோட்டம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று நிலையத்திலிருந்து இழுத்துவரப்பட்ட தேர், அண்ணா சிலை பகுதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று, பத்ரகாளியம்மன்; கைலாசநாதர் - சிவகாமசுந்தரி எழுந்தருளிய தேர்களை, 'அரோகரா' கோஷம் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. தேருக்கு முன் சிலம்பாட்டம், இளைஞர்களின் கிராமிய ஆட்டம் களைகட்டியது. பக்தர்கள் தீச்சட்டி கரகம் எடுத்தும், சிவ தொண்டர்கள் செண்டை மேளம் முழங்கி ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, மாலையில் தேரோட்டம் நடந்து, தேர் நிலையத்தை அடையும்.
முத்தங்கி அலங்காரம்
இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள முத்துக்குமார சுவாமிக்கு வெள்ளிகவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இடைப்பாடி பாலமுருகன் கோவில், கல்லபாளையத்தில் உள்ள ஞானகந்தசாமி கோவிலில், முருகருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்காடு முருகன் நகரில் உள்ள பாலமுருகன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேட்டூரில் குவிந்த
சுற்றுலா பயணியர்
தைப்பூசம், வார விடுமுறை நாளான நேற்று, மேட்டூர் அணை பூங்காவை ஏராளமானோர் சுற்றிப்பார்த்தனர். அங்கு, 3,210 பேர், அணையின் பவள விழா கோபுரத்தை, 355 பேர் பார்த்து ரசித்தனர். இதன்மூலம், 17 ஆயிரத்து, 825 ரூபாய் வசூலானதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் ஆகிய இடங்களை சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். பலர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தே.மு.தி.க., ஆலோசனை
சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க.,வின் அவசர ஆலோசனை கூட்டம் கிச்சிப்பாளையத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்தல் பணிபுரிவது குறித்தும், அதற்காக மாநகர அவைத்தலைவர் செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள், வரும், 10 முதல் ஈரோடு சென்று பிரசாரம் செய்வது குறித்தும் ஆலோசித்தனர். மேலும், தே.மு.தி.க., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ெஹல்மெட் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ெஹல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, சேலம் மாநகர போலீஸ், தன்னார்வ அமைப்பு சார்பில் மாரத்தான் ஓட்டப்போட்டி, சேலத்தில் நேற்று நடந்தது. துணை கமிஷனர் லாவண்யா தொடங்கி வைத்தார்.
ஐந்துரோட்டில் தொடங்கிய ஓட்டப்போட்டி, சாரதா கல்லுாரி சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை வந்து மீண்டும், 5 ரோட்டில் நிறைவடைந்தது. குழந்தைகள், பெரியர்கள் என பலரும் போட்டியில் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டன.
இதுகுறித்து லாவண்யா கூறுகையில், ''நம் உயிரை காக்க, கண்டிப்பாக, ெஹல்மெட் அணிய வேண்டும். அது நம் குடும்பத்துக்கும் மகிழ்ச்சி. அதன்மூலம் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தாலும் பெரும் தலை காயத்தில் இருந்து தப்பிவிடலாம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்,'' என்றார்.
வடமாநில தொழிலாளியை
தாக்கிய 2 பேருக்கு காப்பு
சேலம், செவ்வாய்பேட்டை, மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த வட மாநில தொழிலாளி பவன்குமார் யாதவ், 31. அதே பகுதியில் உள்ள மாவுமில்லில் கூலிவேலை செய்யும் இவர், செவ்வாய்ப்பேட்டை டாஸ்மாக் கடையில் மது அருந்துவது வழக்கம். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், 21, கண்ணன், 22, ஆகியோர், மது வாங்கி தரும்படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து மிரட்டி வந்தனர். நேற்று முன்தினம் மாலை, அவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறில், பவன்குமார்யாதவ், மதுக்கடை அருகே இரு வாலிபர்களையும், அடித்துள்ளார். அன்று நள்ளிரவில், சினிமா பார்த்துவிட்டு, வீடு திரும்பிய பவன்குமார் யாதவை வழிமறித்த இரு வாலிபர்களும், செங்கலால் கடுமையாக தாக்கினர். தொழிலாளி படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்னதானப்பட்டி போலீசார், துளசிராமன்,
கண்ணனை கைது செய்தனர்.
தி.மு.க., கவுன்சிலர் மரணம்
ஆத்துார், புதுப்பேட்டை, முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ேஷக் தாவூத், 55. தி.மு.க., வார்டு செயலரான இவர், 2022ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், ஆத்துார் நகராட்சி, 17வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு, நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, நகர செயலர் பாலசுப்ரமணியம், ஒன்றிய செயலர் செழியன், கவுன்சிலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காளியம்மன் கோவிலில்
தேர் வெள்ளோட்ட விழா
சேலம், செவ்வாய்ப்பேட்டையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு, கவுரவ பலிஜவாரு நாயுடு சமூகத்தினர், 13 லட்சம் ரூபாய் செலவில், தேர் செய்து வழங்கினர்.
அதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. அதையொட்டி தேர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சந்தைப்பேட்டை பிரதான சாலை, அப்பு செட்டி தெரு, கபிலர் தெரு வழியே மீண்டும் கோவிலை அடைந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறநிலையத்துறையினர் பங்கேற்றனர்.
வள்ளலார் தினம்
இறைச்சி கடை மூடல்
வள்ளலார் தினத்தையொட்டி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி கூடம், கடைகளை மூட கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அதன்படி பழைய பஸ் ஸ்டாண்ட், அம்மாபேட்டை, 4 ரோடு, அன்னதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது திறந்திருந்த சில கடைகள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ரவுடி வெட்டிக்கொலை
சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன், 38. வீராணம் போலீஸ் ஸ்டேஷனில், ரவுடி பட்டியலில் உள்ளார்.
இவர் மீது, அயோத்தியாப்பட்டணம் அருகே முறுக்கு வியாபாரி கணேசனை கொன்றது, பஸ் கண்டக்டரை கொன்றது உள்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு, 10:30 மணிக்கு காட்டூரில் உள்ள சுடுகாடு பகுதியில் ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி, கொடுவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்துக்கு விரைந்த, காரிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
திருப்பி விடப்பட்ட பஸ்கள்
இடைப்பாடி பயணியர் அவதி
இடைப்பாடியில் உள்ள அரசு போக்குவரத்து கிளை மூலம் தினமும், 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 35க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் அடங்கும். இந்த பஸ்களில் பயணிக்கு பெண்களுக்கு கட்டணம் இல்லை. நேற்று இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்த டவுன் பஸ்களை, 'சிறப்பு பஸ்கள்' பெயரில் போக்குவரத்து அதிகாரிகள் வேறு ஊருக்கு அனுப்பினர். இதனால் வழக்கமான நேரத்தில் பஸ்கள் வரும் என நினைத்து, ஏராளமான பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர், நேற்று இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர்.
விரக்தியடைந்த பெண்கள், இடைப்பாடி போலீசாரிடம் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார், மக்களிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து, ஒன்றரை மணி நேரத்துக்கு பின் பஸ்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் செல்லும் ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.