தர்மபுரி: தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில், இன்று முதல் நடக்கும், முதல்நிலை போலீசாருக்கான தேர்வு பணிக்கு, 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான, தமிழ்நாடு முதல்நிலை ஆண் போலீஸ் பணிக்கான தேர்வு பணி, தர்மபுரி அடுத்த
வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று முதல் துவங்குகிறது. இப்பணிக்கு ஓய்வுபெற்ற ராணுவத்தினர், 60 பேர் உட்பட மொத்தம், 1,138 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் வரும், 8 வரை முதற்கட்ட தேர்வாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு சரிபார்த்தல் மற்றும், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முதற்கட்ட தேர்வுக்கு இன்று முதல் நாளொன்றுக்கு, 400 விண்ணப்பதாரர்கள் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று முதல், தர்மபுரி ஆயுதபடை மைதானத்தில் துவங்கும், முதல்நிலை போலீஸ் பணிக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில், 250 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும், இப்பணி தொடர்பான அனைத்து நிகழ்வுகளும், வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. பாதுகாப்புக்காக, மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.