நாமக்கல்: நாமக்கல், மோகனுார் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை
வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், வழக்கம் போல், பூஜைகள் மட்டுமே நடந்தது. அதன்படி, கடந்த, 28 முதல், கட்டளைதாரர்கள் அபிஷேக ஆராதனை நடந்தது.
தைப்பூசமான நேற்று, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். தொடர்ந்து, பால் குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். அதையடுத்து, சுவாமிக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேக செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூச திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* அதேபோல், நாமக்கல்-
மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவ பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேமும், பகல், 12:00 மணிக்கு, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். இரவு, 8:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.