திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஆறுமுக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த, 1971ம் ஆண்டு கடைசியாக தைப்பூச தேர் திருவிழா நடந்தது. அதன் பின், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 51 ஆண்டுக்கு பின், கடந்த ஜன., 28ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று, தை மாத பூச நட்சத்திரத்தில் வள்ளி, தேவசேனா ஆறுமுகசுவாமி, விநாயகர், சேமாஸ்கந்தர் சுகுந்த குந்தலாம்பிகை பரிவாரங்கள் புடைசூழ திருத்தேரில் எழுந்தருளினர்.
கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். மாநில தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய
குழு தலைவர் சுஜாதா தங்கவேல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா, டி.எஸ்.பி., மகாலட்சுமி, கோவில் உதவி ஆணையர்
ரமணிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு
மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி
வைத்தனர்.
தோரோட்ட வீதிகளில் பூங்கரகம், காவடி ஆட்டம், மயிலாட்டம், சிவன் பார்வதி ஆட்டத்துடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக நிலை சேர்ந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணியளவில் கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை, சோமாஸ்கந்தர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து
இழுத்தனர்.
மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் வட்டூர் தங்கவேல் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.