நாமக்கல்: 'புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி நெல் விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், பருவமழை சீசன் முடிந்த பின், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, டெல்டா மாவட்டங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள், திடீர் மழையால் பாதிக்கப்பட்டு, அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். அறுவடை செய்யும் நிலையில் உள்ள நெற்பயிர்கள், தண்ணீரில் மூழ்கி உள்ளதால், டெல்டா மாவட்ட ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை, தமிழக வேளாண் துறை அமைச்சர் அல்லது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு, சேதத்தை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பாதிப்பு விபரங்கள் குறித்த புள்ளி விபரங்களை தமிழக முதல்வர் மற்றும் மத்திய அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை உயர் அதிகாரிகள் யாரும், டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிப்பு விபரங்களை பார்வையிடவில்லை.
அதனால், அப்பகுதி விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். உடனடியாக வேளாண் துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர், டெல்டா பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகருக்கு, ஏக்கர் ஒன்றுக்கு, குறைந்த பட்சம், 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிட, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை கூட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.