மாநில கூடைப்பந்து போட்டி
'சென்னை அரைஸ்' முதலிடம்
நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 1ல், துவங்கி, ஐந்து நாட்கள் நடந்தன. இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில் சென்னை அரைஸ், தமிழ்நாடு போலீஸ், கோவை குமரகுரு, நாகை ஆசியன் அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.
பெண்கள் பிரிவில், சென்னை ரைசிங் ஸ்டார், கோவை பி.எஸ்.ஜி., சென்னை 0205, எஸ்.ஆர்.எம்., அணிகள் முறையே, முதல் நான்கு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தனித்தனியே முதல் பரிசு, 60 ஆயிரம், இரண்டாம் பரிசு, 50 ஆயிரம், மூன்றாம் பரிசு, 40 ஆயிரம், நான்காம் பரிசு, 30 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜன், சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி, துணை தலைவர் பரந்தாமன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டாமங்கலம் கிராமத்தில்
பா.ஜ., கிளை துவக்க விழா
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், புதுச்சத்திரம் ஒன்றியம், நாட்டாமங்கலம் பஞ்சாயத்தில், கிளை துவக்க விழா மற்றும் கட்சி கொடியேற்று விழா, நேற்று
நடந்தது.
மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து, கட்சிக்கொடி ஏற்றி வைத்து, கிளையை துவக்கி வைத்து பேசினார். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ராம்குமார், ராசிபுரம் ஒன்றிய பார்வையாளர் தமிழரசன், கிழக்கு மாவட்ட பட்டியல் அணி பொறுப்பாளர் ராஜா, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் முத்துசாமி, செயலாளர் ரமேஷ் உள்பட பலர்
பங்கேற்றனர்.
தத்தகிரி முருகன் கோவிலில்
1,008 பால்குட ஊர்வலம்
நாமக்கல் சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் இடும்பன், பஞ்சமுக விநாயகர், ஐயப்பன், தட்சணா மூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, சிவன், அவதுாத சுவாமிகள் அமைந்துள்ளன.
தைப்பூச விழாவை முன்னிட்டு தத்தகிரி முருகனுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில் இருந்து, 1,008 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
தத்தகிரி முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், 1,008 குடம் பால், தயிர், இளநீர், விபூதி,
பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தன. முருகன் சந்தன காப்பு, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு: வாடிவாசல் அமைக்கும் பணிக்கு பூஜை
எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி பஞ்.,ல் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தை ஆர்.டி.ஓ., மஞ்சுளா பார்வையிட்டு சென்றார். இதையடுத்து அந்த இடத்தில் வாடிவாசல் அமைப்பதற்கான பூமி பூஜை பஞ்., தலைவர் துளசிராமன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், 'அட்மா' குழு தலைவர் பாலசுப்பரமணியன் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமலை நாயக்கர்
440வது ஜெயந்தி விழா
மாமன்னர் திருமலை நாயக்கரின், 440 ஜெயந்தி விழா, மாவட்ட நாயுடு இளைஞர் அணி சார்பில், நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சக்தி வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகர தலைவர் ரஞ்சித் வரவேற்றார். மாவட்ட நாயுடு நல சங்க செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு, நாமக்கல்-மோகனுார் சாலை அண்ணாதுரை சிலை அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருமலை நாயக்கரின் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, விழாவுக்காக மதுரை சென்றவர்களுக்கு, வழியனுப்பு விழா நடந்தது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
270 கிலோ ரேஷன் அரிசி
பதுக்கிய முதியவர் கைது
நாமக்கல் புதுச்சத்திரம் அடுத்த கதிராநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அருகே, ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., சதீஸ்குமார் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, மாரிமுத்து, 66, என்ற முதியவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 270 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
செயின் திருடர்களை
பிடிக்க தனிப்படை
சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சவுந்தர்யா, 39; கடந்த, 3ல் டூவீலரில் அண்ணா நகர் மேம்பாலத்தில் சென்று
கொண்டிருந்த போது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த, 3 மர்ம நபர்கள் சவுந்தர்யாவின் கழுத்தில் அணிந்திருந்த, 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நாமக்கல் எஸ்.பி., கலைச்செல்வன் உத்தரவுப்படி, டி.எஸ்.பி., சுரேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புலிமலை முருகனுக்கு
சந்தன காப்பு அலங்காரம்
சேந்தமங்கலம் அடுத்த ஆர்.பி., புதுாரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த புலிமலை முருகன் கோவில், 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு புலிமலை முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
புலிமலை முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் புலிமலை உச்சிக்கு சென்று முருகனை வழிபட்டனர்.
ஆண்கள் மட்டும்
பங்கேற்ற கறி விருந்து
நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டியை ஒட்டியுள்ள போதமலை தொடர்ச்சியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பணார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில், ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்வது வழக்கம். நேற்று மாலை, 4:00 மணிக்கு சமாபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. இதில், 46 ஆட்டு கிடா, 22 பன்றிகள், 22 சேவல்கள் பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில் சமபந்தி விருந்துக்கான சமையலை, 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே செய்தனர். 2,320 கிலோ கறி சமைக்கப்பட்டது. இதில், 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு
சென்றனர்.
நிலா பிள்ளையார்
கும்மியடி திருவிழா
குமாரபாளையத்தில், 16ம் ஆண்டு நிலா பிள்ளையார் கும்மியடி திருவிழா நடந்தது. குமாரபாளையம், வேதாந்தபுரம் எம்பெருமாள் குடியிருப்பு பகுதியில் ஆண்டுதோறும் கும்மியடி திருவிழா நடப்பது வழக்கம். 16வது ஆண்டாக நிலா பிள்ளையார் கும்மியடி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கவுன்சிலர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சேர்மன் விஜய்கண்ணன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செல்வ சுப்பிரமணிய
சுவாமிக்கு கும்பாபிஷேகம்
மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற செல்வநாயகி அம்மன் உடனமர் செல்வலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அதில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செல்வ சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சுவாமிக்கு நேற்று காலை, 8:00 மணிக்கு, புனிதநீர் உற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
யோகாவில் உலக சாதனை
குமாரபாளையத்தில் யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை யோகா போட்டி நடத்தபட்டது. பொது செயலர் அரவிந்தன், போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதா தலைமை வகித்தனர். நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி, கடலுார், சென்னை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து, மூன்று வயதிலிருந்து, 30 வயது வரையிலான, 300 நபர்கள் பங்கேற்றனர். ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகாசனம் தொடர்ந்து, 5 நிமிடங்கள் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. 'நோபல் வோர்ல்டு ரெக்கார்டு' அமைப்பினர் இதனை அங்கீகரித்தனர். தேசிய அளவில் யோகாவில் தங்கப்பதக்கம் வென்ற போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதாவிற்கு சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது.