கும்மிடிப்பூண்டி,--அம்பத்துார் பகுதியில் வசிப்பவர் நாராயண், 22. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்.
நேற்று காலை, வேலை நிமித்தமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு, 'ஹோண்டா ஜாஸ்' காரில் சென்று கொண்டிருந்தார்.
உடன், வேலை பார்க்கும் விவேகானந்தர், 40, என்பவரும் காரில் சென்றார். நாராயண் காரை ஓட்டிச் செல்ல, விவேகானந்தர் அருகில் அமர்ந்து சென்றார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த, புதுவாயல் பகுதியில், அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று காரின் பின்னால் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி, சாலையோரம் நின்று கொண்டிருந்த, லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
காரின் முகப்பு பகுதி முழுதும் உருக்குலைந்து லாரியின் அடியில் சிக்கி கொண்டது. காரில் பயணித்த இருவரும், 'சீட் பெல்ட்' அணிந்திருந்ததால், 'ஏர் பேக்' வெளியேறி, இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தை கண்ட மக்கள் அலறியடித்து கூடிய போது, காரில் பயணித்த இருவரும் சாதாரணமாக காரில் இருந்து இறங்கியதை கண்டு வியப்படைந்தனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், கிரேனை பயன்படுத்தி காரை மீட்டனர். விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.