திருத்தணி,-திருத்தணி ரயில் நிலையத்திற்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து, சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா, திருப்பதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மூன்று நடைமேடைகளிலும் பயணியருக்கு போதிய அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவில்லை.
குறிப்பாக இருக்கை, நிழற்குடை, குடிநீர் மற்றும் மின் விசிறி போன்ற வசதிகள் ரயில்வே நிர்வாகம் செய்து தராததால் தினமும் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.
அதாவது, வெயிலில் காய்ந்தும் மற்றும் மழையில் நனைந்தும் பயணியர் ரயில்கள் வரும் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
அதே போல ரயில் நிலையத்தில் இருந்து அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இடையில் வழி ஏற்படுத்தாததால் பயணியர் நடைமேடை இரண்டு மற்றும் மூன்று ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.
எனவே ரயில்வே உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.