சென்னை,-சென்னையில் சுப மற்றும் துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களின் போஸ்டர்கள், பயணியர் நிழற்குடை உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதனால், சென்னை மாநகரின் அழகு சீர்குலைந்து வருகிறது. இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது.
தொடர்ந்து, தெரு, சாலை பெயர் பலகைகளில் 'போஸ்டர்' ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் துாய்மையை பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் அமைத்தல் போன்ற, அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும், பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பயணியர் நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, மாநகரின் அழகு சீர்குலைக்கப்படுகிறது.
பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்கள் மீது அபராதம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜன., 11 முதல் பிப்., 1ம் தேதி வரை போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது 1.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 11 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள், மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.