மேல்நல்லாத்துார்,-மணவாள நகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துாரில் ஜே.சி.பி., இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த சாலையில் தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை, கனரக, இலகு ரக, இருசக்கர வாகனங்கள் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதி தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களை நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வலியுறுத்தி நேற்று அருகில் உள்ள நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் தலைமையில் 40 இளைஞர்கள் ஒன்று கூடி நெடுஞ்சாலையில், தொழிற்சாலை நுழைவாயில் பகுதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தகவலறிந்த திருவள்ளூர் ஏ.எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினர்.
இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அரவிந்தன் உட்பட 41 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.