திருவள்ளூர்,-திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் விளையாட்டு போட்டி நேற்று துவங்கியது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பொதுப்பிரிவினர் அரசு ஊழியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியினை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து, துவக்கி வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல் நாளான நேற்று, தடகளம், வாலிபால் போட்டி நடந்தது. இதில், ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் ரிஷப், முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று, செஸ் போட்டியும், 8ம் தேதி கால்பந்து, கபடி போட்டி; சிலம்பம், 10 - 11ம் தேதியும், திருவள்ளூர் விளையாட்டரங்கில் நடக்கிறது.
ஹாக்கி போட்டி, 12ம் தேதி ஆவடி நசரேத் கலை கல்லுாரியிலும், நீச்சல் போட்டி, முகப்பேர் டால்பின் நீச்சல் குளத்திலும், நடைபெறும்.
கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், திருவள்ளூர் விளையாட்டு அரங்கத்தில், முறையே 14 மற்றும் 15ம் தேதி நடைபெற உள்ளது.