மணவாள நகர்,-கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில் தினமும் சேகரமாகும் இரண்டு டன் குப்பையை கூவம் ஆற்றுப் பகுதியில் கொட்டி வந்தனர்.
நீர்நிலைகளில் குப்பைக் கொட்டக்கூடாது அரசு உத்தரவையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், வெங்கத்துார் ஊராட்சிக்கு ஆற்றில் குப்பைக் கொட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட கன்னியம்மன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குப்பை கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியால் வெங்கத்துார் ஊராட்சியில் மணவாள நகர் பகுதியில் உள்ளஅன்பழகன் தெரு, அண்ண நகர், கருணாநிதி தெரு உட்பட பல இடங்களில் சில தினங்களாக குப்பை அகற்றப்படாமல் மலைபோல் தேங்கி கிடக்கிறது.
இந்த குப்பையில் இரை தேட மாடுகள், பன்றிகள் குப்பையை கிளறுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், குப்பையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெங்கத்துார் ஊராட்சி மக்கள் எதிர்பார்த்துஉள்ளனர்.