அவிநாசி:சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வழியாக அரசு டவுன் பஸ் நேற்று மாலை அவிநாசிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, சூளை பஸ் ஸ்டாப் அருகே, டிரைவர் மாரப்பனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்படியே தட்டுத்தடுமாறி பஸ்சை ஓட்டி, ரோட்டோரம் பஸ்சை நிறுத்தி, ஸ்டியரிங்கின் மேல் விழுந்து மயக்கம் அடைந்தார். உடனே, நடத்துனர் முருகேசன் மற்றும் சில பயணிகள் அவரை, ஆம்புலன்ஸ் மூலம், அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நலமுடன் வீடு சென்றார். மருத்துவர்கள் கூறுகையில், 'உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், நடுக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே தன் நிலை உணர்ந்து பஸ்சை நிறுத்தி விட்டார். இதனால், பயணிகள் உயிர் தப்பினர்,' என்றனர்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி, 30 பேரை காப்பாற்றிய டிரைவர் மாரப்பனை பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.