கோவை;போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணியில் சேருவதற்கான உடல் தகுதித்தேர்வு கோவையில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் தீயணைப்பாளர்கள் என 3552 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்தாண்டில் வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்தாண்டு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு, அந்தந்த மண்டல வாரியாக தற்போது நடத்தப்படுகிறது.
கோவை நேரு ஸ்டேடியத்தில் பெண் தேர்வர்களுக்கும், பி.ஆர்.எஸ்., மைதானத்தில் ஆண் தேர்வர்களுக்கும் உடல் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது.அழைப்புக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 300 பெண்களில் 185 பேர் மட்டுமே நேற்றைய தேர்வுக்கு வந்திருந்தனர். அதேபோல, அழைப்புக்கடிதம் தரப்பட்ட ஆண்கள் 400 பேரில், 316 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இவர்களது சான்றிதழ்களை அதிகாரிகள் சரி பார்த்தனர். தொடர்ந்து பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு, கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையிலும், ஆண்களுக்கான உடல் தகுதித்தேர்வு, டி.ஐ.ஜி., விஜயகுமார், எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையிலும் நடந்தது.
ஆண்களுக்கு மார்பளவு, உயரம் அளத்தலுக்கு பின், 1500 மீட்டர் தகுதி ஓட்டம் நடத்தப்பட்டது. பெண்களுக்கு 400 மீட்டர் தகுதி ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும், நாளையும் உடல் தகுதித்தேர்வு நடத்தப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.