கோவை:கடந்த இரு மாதங்களில், டாக்டரின் பரிந்துரை கடிதம் இன்றி வலி நிவாரணி மருந்துகளை வழங்கிய எட்டு மருந்துக்கடைகள் மீது மருந்து நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும் போதைப்பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனையை ஒழுங்குபடுத்த மருத்து கட்டுப்பாட்டு துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த இரு மாதங்களில், மருந்து மொத்த விற்பனையாளர்கள், மருந்துக்கடைகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியது.
இதையடுத்து டாக்டர்களின் உரிய பரிந்துரை கடிதம் இன்றி வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த மருந்துக்கடைகள், மொத்த விற்பனையாளர்கள் மீது மருந்துக்கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் குருபாரதி கூறியதாவது:
மருத்துக்கட்டுப்பாட்டு துறை இயக்குனர் விஜயலட்சுமியின் அறிவுறுத்தலின்படி, தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், கடந்த மூன்று மாதங்களில், எட்டு மருந்துக்கடைகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுதவிர, நான்கு சில்லரை விற்பனையாளர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு மொத்த விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்ய இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்ததும் உரிமம் ரத்து செய்யப்படும்.
மருந்து சீட்டு இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை் விற்பனை செய்யக்கூடாது என, மருந்து விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.