கோவை:மாநில அளவில் பள்ளி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் வைர விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது.
இதில் சென்னை வித்யோதயா பள்ளி, சேலம் செயின்ட் ஜோசப் பள்ளி, விருதுநகர் சத்ரியா பள்ளி, கோவை சி.சி.எம்.ஏ., துாத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மற்றும் கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன் போட்டியிட்டு அதிக புள்ளிகள் எடுக்கும் அணி முதலிடத்தை பிடிக்கும்.
வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக கோப்பை, சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தொகை,இரண்டாம் இடம் பெறும் அணிக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கம் ரூ. 15 ஆயிரம் ரொக்க பரிசு, மூன்றாம் இடம் பெறும் அணியினருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கம் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் அணியினருக்கும் ரொக்க பரிசாக ஐந்தாயிரம் வழங்கப்பட உள்ளது.
நேற்று காலை நடந்த தகுதி சுற்றுப்போட்டியில், கிருஷ்ணம்மாள் பள்ளி அணி, 45 - 13 என்ற புள்ளிகணக்கில் சுகுணா பிப் பள்ளி அணியை வீழ்த்தி லீக் சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று மாலை கிருஷ்ணம்மாள் பள்ளி மற்றும் விருதுநகர் சத்ரியா பள்ளிகள் இடையே நடந்தமுதல் லீக் போட்டியில்,கிருஷ்ணம்மாள் பள்ளி அணி வெற்றி பெற்றது.