கோவை:இல்லம் தேடி கல்வி மையத்திற்கு, அடிக்கடி விடுப்பு எடுப்போரின் பட்டியலை, பள்ளிகளில் சமர்ப்பிக்குமாறு, தன்னார்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி குறைக்க, இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தினசரி பள்ளி முடிந்ததும், ஒன்றரை மணி நேரம் வரை, மையத்திற்கு சென்று படிப்பர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கொண்டு, பாட சந்தேகங்கள் விளக்கப்படுகின்றன. வகுப்பு வாரியாக நடத்தப்படும் சிலபஸ், பாடப்புத்தகங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டதோடு, கற்பித்தல் பயிற்சிகளும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மையத்திற்கு அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல், பள்ளியில் சமர்ப்பிக்குமாறு, தன்னார்வலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களின் பெற்றோரிடம் எடுத்துக்கூறி மீண்டும் மையத்திற்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல், மையத்திற்கு வருவோரில், அதிக கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளின் பட்டியலை, தன்னார்வலர்களிடம் ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். இம்மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, இக்கல்வியாண்டு முடிவதற்குள், குறைந்தபட்ச கற்றல் அடைவு பூர்த்தி அடைய ஆவண செய்யுமாறு, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.