துாத்துக்குடி:காதல் பிரச்னையில் விசாரணை மேற்கொண்ட துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் எஸ்.ஐ.,க்கு, காதலியின் அண்ணன், ஸ்குரூ டிரைவரால் குத்தியதில் காயம் ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பவானி, 20. இவர் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நர்சிங் முடித்துஉள்ளார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் சந்திரசேகர், 23, என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கோகுல் சந்திரசேகர் கன்னியாகுமரியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.
இருவரும் சில நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
பவானியை காணவில்லை என பெற்றோர் குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தனர். நேற்று எஸ்.ஐ., ரவிச்சந்திரன் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார்.
விசாரணை நடந்து கொண்டிருந்தபோது பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி, 26, மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் கோகுல்சந்திரசேகர் கழுத்தில் குத்த முயன்றார். அதை எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தடுத்தார்.
அவரது வலது கையில் குத்து விழுந்தது. கோகுல் சந்திரசேகருக்கும் கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ., ரவிச்சந்திரன்- திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.