நந்தம்பாக்கம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 23; பட்டதாரி. வேலை தேடி சென்னை வந்த இவர், தனியார் கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு, சென்னை விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் செல்ல வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்தார். அதன்படி, விமான நிலையத்திலிருந்து வாடிக்கையாளருடன் முகலிவாக்கம் நோக்கி சென்றுள்ளார்.
வரும் வழியில் வாடிக்கையாளர், ஒரு சில இடங்களில் நண்பர்களை சந்திக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தக் கூறி, 10 நிமிடம் தாமதாக வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நந்தம்பாக்கம் வந்ததும், மீண்டும் உணவகத்தில் நிறுத்தக் கூறியதாகவும் அதற்கு திருநாவுக்கரசு மறுத்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில் டிரிப்பை முடிக்க வேண்டும் எனக்கூறி, ஓட்டுனர் வாகனத்தை நிறுத்த மறுத்ததால், அந்த வாடிக்கையாளர் ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் திடீரென தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருநாவுக்கரசு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, நந்தம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் காரில் வந்த வாடிக்கையாளர், தமிழக கவர்னர் அலுவலக ஊடகப்பிரிவு ஆலோசகரான திருஞானசம்பந்தம் என தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.