திருப்பத்துார்:வாணியம்பாடியில், நான்கு பெண்கள் பலியான சம்பவத்தில், சரியாக செயல்படாத டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் அய்யப்பன், 50, தைப்பூசத்தை ஒட்டி, 2,000 பேருக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதாக அறிவித்தார்.
அதற்கான டோக்கனை கடந்த, 4ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, வாணியம்பாடி சந்தை அருகே வழங்கியபோது, கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் இறந்தனர்.
இதற்கு காரணமான அய்யப்பன் கைது செய்யப்பட்டு, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்துார் எஸ்.பி., பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
அதில், வாணியம்பாடி டவுன் போலீசாரின் அனுமதி பெறாமல், டோக்கன் வழங்க அனுமதித்தது; அதிக கூட்டம் குவிந்த தகவல் தெரிந்தும், தாமதமாக போலீசார் சென்றது போன்ற காரணங்களால் நான்கு பெண்கள் இறந்தது தெரிந்தது.
இந்த விஷயத்தில் சரியாக செயல்படாத வாணியம்பாடி டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோருக்கு எஸ்.பி., பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டு, நேற்று மெமோ வழங்கினார்.