திருநெல்வேலி:திருநெல்வேலி, 'போக்சோ' நீதிமன்றத்தில் தந்தை மீதான பாலியல் வழக்கில் சாட்சியமளிக்க மறுத்த மகள், மகன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
தென்காசியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயன், 45. கடந்த, 2021ல் மகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனைவி புகாரின்படி போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விஜயன் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட மகள், மகன் ஆஜராகினர்.
திடீரென மகளும், மகனும் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி, முழுதும் நனைந்தபடி நீதிமன்றத்திற்குள் சென்றனர்; தீக்குளிக்கவும் முயன்றனர். அவர்களை போலீசார் மீட்டனர்.
அவர்கள், 'தந்தை தற்போது திருந்தி விட்டார். எங்களை போலீசார் சாட்சியமளிக்க கட்டாயப்படுத்துகின்றனர். சாட்சியம் கூற மாட்டோம்' என்றனர்.
மாற்று உடைகள் கொடுத்து அவர்கள் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுடலை, 53. இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் கைதானார்.
கடந்தாண்டு டிச., 23ல் அவருக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அதைக்கேட்ட அவர், எடுத்து வந்திருந்த விஷத்தை அருந்தி, நீதிமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.