திருச்சி:சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், 'யூடியூப்' சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிடுபவர்கள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை, ஒரு கும்பல் மறைமுகமாக மிரட்டி பணம் பறிப்பதாக, திருச்சி மாநகர காவல் கமிஷனருக்கு புகார் வந்தது.
போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சென்னையைச் சேர்ந்த ஜெனிபர் தனம், 32, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி, 37, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், சமூக வலை தளங்களில் போட்டோக்களை பதிவிட்டு, மன உளைச்சலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.