திட்டக்குடி, : ஆவினங்குடி ஊராட்சி செயலாளரைக் கண்டித்து, பஞ்சாயத்து தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி, 34; ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்டம் 1994ன் 203பிரிவின் கீழ், பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ., கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
ஊராட்சி செயலாளர் இளவரசி, நேற்று மாலை 3.௦௦ மணியளவில், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஷ் புக் மற்றும் தீர்மான நோட்டை தருமாறு, பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார்.
அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி, அலுவலகத்திலேயே அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறினார்.
ஊராட்சி செயலாளர் இளவரசி, வீட்டில் எழுதி, பின்னர் பி.டி.ஓ.,விடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறேன் எனக்கூறினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி, 3.40 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு வாயிலில் அமர்ந்து, ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவலறிந்த மங்களூர் பி.டி.ஓ.,முருகன், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மாலை 4 .00 மணிக்கு பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இந்த சம்பவம் ஆவினங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.