விக்கிரவாண்ட : விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை பகுதியில் போடப்பட்ட தார் சாலை தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் அணை பராமரிப்பு பணி 43 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் 4.5 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி, நேற்று முன்தினம், நடந்தது.
நேற்று காலை அத்திக்குப்பம் கிராம மக்கள் சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று தார் சாலை தரமற்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.சாலையை கையாலேயே பெயர்த்து எடுத்தனர். மேலும், அதனை மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து வீடூர் அணையின் உதவி செயற் பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, 'பணி ஆணையின்படி 4.5 கி.மீ., துாரத்திற்கு 2 செ.மீ., உயரத்தில் மூன்றே முக்கால் அடி அகலத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலை உறுதி தன்மை அடையும் முன்பே பொதுமக்கள் சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலையை பெயர்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.' என்றார்.
ஒப்பந்ததாரர் ஜே.கே., கன்ஸ்ட்ரக் ஷன் உதவி பொறியாளர் ரவியிடம் கேட்டபோது,'சும்மா வீடியோ வெளியிட்டுள்ளனர்' என அலட்சியமாக பதில் தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளும், கலெக்டரும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.