விழுப்புரம் : விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மீண்டும், மீண்டும் மணல் குவாரி அமைத்து மணல் வளம் சுரண்டப்பட்டு நிலத்தடி நீராதாரம் கடுமையாக பாதித்துள்ளது. புதிய மணல் குவாரியை மூட வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விவசாயத்தை நம்பிய பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தின் விளை நிலங்களின் பாசனத்திற்கு, தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆகிய இரு ஆறுகள் உறுதுணையாக இருந்து வருகின்றன.
ஆண்டுதோறும் சராசரி மழை அளவு குறைந்து வருவதால், இவ்விரு ஆறுகளில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, குடிநீரும், விவசாய பாசனமும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை மூலம் ஆற்றில் அதிக நீர் வருகிறது. தேக்கி வைக்க அணைக்கட்டு இல்லாததாதல், கடலில் கலந்து வீணாகிறது.
ஏரி பாசனம் குறைந்து, மின்மோட்டார் பாசனம் பிரதானமாக உள்ளதால், நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு நிலத்தடி நீராதாதரத்தை பாதிக்கும் வகையில், ஆறுகளில் மணல் வளத்தை அழித்து வருகிறது.
சுரண்டப்பட்ட ஆறு
திருக்கோவிலுார் பகுதி தொடங்கி விழுப்புரம், சின்னகள்ளிப்பட்டு பகுதி வரை, கடந்த 15 ஆண்டுகளில், தொடர்ந்து பல இடங்களில் அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகள் அமைத்து, மணல் விற்பனை நடந்தது.
இதனால் மணல் வளம் பெருமளவு குறைந்து, மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, சிறிதளவு நீரையும் சேமிக்க வழியின்றி, வீணாக கடலில் கலந்து வருகிறது.
தென்பெண்ணையாற்றில், விழுப்புரம் அடுத்த மரகதபுரம், பிடாகம், பேரங்கியூர், தளவானுார், சின்னகள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக மாறி, மாறி குவாரிகள் அமைத்து மணல் அள்ளப்பட்டது. இந்த மணல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனால் பாலாற்றை தொடர்ந்து, தென்பெண்ணையாற்றிலும் மணல் வளம் குன்றியது, மரகதபுரம் முதல் சின்னகள்ளிப்பட்டு வரை 20 கி.மீ., துாரத்திற்கு ஆற்றில் தரை தெரியும் அளவிற்கு, பல இடங்களில் 30 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது.
ஆற்றின் தரைத்தளம் குறைந்ததால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு தொடங்கி, ஆற்றிலிருந்து பிரியும் பல்வேறு கிளை வாய்க்கால்களுக்கு, மழை நீர் வரும்போதும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விழுப்புரம் அடுத்த பம்பை வாய்க்கால், மலட்டாறு உள்ளிட்ட பல கிளை நதிகள் நீரோட்டம் இன்றி வறண்டன.
மீண்டும் மணல் குவாரி
இந்நிலையில், விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில், அரசு சார்பில் மீண்டும் மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள், விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 18ம் தேதி குவாரி தொடங்கி, மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.
ஏனாதிமங்கலம் ஆற்றில் 11 ஹெக்டேர் பரப்பளவில், அரசு தரப்பில் சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற்று, குவாரி தொடங்கியுள்ளனர்.
மக்கள் போராட்டம் நடத்தியதால், கடந்தாண்டு ஜூன் 2ம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினர். அப்போது ஏனாதிமங்கலம் அதனைச் சுற்றியுள்ள மாரங்கியூர் எரளூர், செம்மார், கப்பூர், மரகதபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் நேரடியாகச் சென்று தங்களது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தனர்.
''ஏற்கனவே 3 முறை குவாரி அமைத்து மணல் வளத்தை சுரண்டியதால், விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு குவாரி அமைக்க கூடாது'' என 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடிநீர் ஆதாரம்
இங்கு மணல் குவாரி அமைப்பதால், ஏனாதிமங்கலம் சுற்றியுள்ள மாரங்கியூர், சேத்துார், பல்லுார், சிறுமதுரை, சிறுவானுார், ஏமப்பூர், செம்மார், கரடிப்பாக்கம், டி.வி.நல்லுார், மரகதபுரம், கோவிந்தபுரம் கப்பூர், மாரங்கியூர், பேரங்கியூர், கண்டம்பாக்கம் என 50 மேற்பட்ட கிராமங்களுக்கான நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
விழுப்புரம் நகராட்சிக்கு, ஏனாதிமங்கலம் குவாரி அருகே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தான் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எல்லீஸ்சத்திரம் குடிநீர் திட்டத்தின் மூலமே விழுப்புரம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, அங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ள நிலையில், மீண்டும் மணல் எடுப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, நகராட்சி தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், விவசாயத்துக்கான நிலத்தடி நீர், பொது மக்களுக்கான குடிநீர் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏனாதிமங்கலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் கூட்டி, மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என தீர்மானமும் போட்டனர்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் அங்கே மணல் குவாரி அமைப்பது, சுற்றுச்சூழலுக்கும், நீர் ஆதார அடிப்படை உரிமைக்கும் எதிரானது என இயற்கை ஆர்வலர்களும் எச்சரித்து, போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்று பகுதியில் கடந்த 2006, 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் பிடாகம், பேரங்கியூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம் ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டது. 2.7 மீட்டர் ஆழம் மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதியை மீறி, பல இடங்களில் 30 அடி ஆழம் வரை மணல் எடுத்தனர். ஆற்றில் தரை பகுதி வரை சுரண்டப்பட்டது.
இதனால் ஆற்றில் உருவான மெகா பள்ளங்களில், மழைநீர் தேங்கி, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பேர் இறந்துள்ளனர்.
தற்போது மீண்டும் ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரியை 2 ஆண்டுகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளனர். அங்கே இரண்டு மாத காலம் கூட மணல் எடுக்க முடியாது.
எல்லை கடந்து மணல் எடுப்பார்கள். தற்போது, 10 முதல் 16 அடி ஆழம் மணல் எடுக்கின்றனர். தினமும் 750 லாரிகள் வந்து செல்கின்றன. அருகே உள்ள சிறுவானுாரில் 'யார்டு' அமைத்து, மணல் ஏற்றி அனுப்புகின்றனர்.
வரைமுறையின்றி தொடர்ந்து மணல் எடுக்கப்பட்டதால், எல்லீஸ் அணைக்கட்டு கடந்த 2021ம் ஆண்டு உடைந்தது. ஏற்கனவே, தளவானுார் அணைக்கட்டும் உடைந்து வீணாகிப் போனதால், விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் சேமிக்க வாய்ப்பின்றி, மழை நீர் கடலில் கலந்து வீணாகிறது.
இப்பகுதியில் 30 அடி ஆழத்திலிருந்த நீர்மட்டம், தற்போது 300 அடிக்கு கீழ் சென்று விட்டது. வளமான விவசாயம் நடைபெற்று வரும் இதுபோன்ற இடங்களில் மணல் குவாரி அமைத்து பேரிழப்பை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இந்த மணல் குவாரிக்காக, திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து அரசூர் வழியாக லாரிகள் அணிவகுத்து வருகின்றன. லாரிகள், ஏனாதிமங்கலத்தில் மணல் எடுத்துக் கொண்டு, எல்லீஸ்சத்திரம் சாலை வழியாக விழுப்புரம் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தினசரி 300க்கும் மேற்பட்ட கனரக லாரிகள், ஒரே வழியாக அதிவேகமாக கடந்து செல்வதால், வழியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விபத்திலும், புழுதிக்காற்றிலும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குவாரியை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் தயாராகி வருகின்றன.