உடுமலை;பள்ளி, கல்லுாரி நேரங்களில், அதிக அளவிலான அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:
உடுமலையிலிருந்து, பொள்ளாச்சிக்கு பல்வேறு கல்லுாரிகளுக்கும் மாணவர்கள் அதிகமாக சென்று வருகின்றனர்.
போதுமான அளவிற்கு காலை, மாலை நேரங்களில், கல்லுாரி, பள்ளிக்கு செல்லும் பஸ்போக்குவரத்து இல்லாத காரணத்தால், மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டியதுள்ளது.
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் திப்பம்பட்டி தனியார் கல்லுாரி முன் உள்ள பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நிற்பதில்லை.
இதன் காரணமாக தனியார் பஸ்களில் அதிகமான மாணவர்கள் பயணம் செய்ய வேண்டியதுள்ளது.
இந்நிலையில்,நேற்றுமுன்தினம் தனியார் பஸ்சில் பயணம் செய்த கல்லுாரி மாணவர் நழுவி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
எனவே, விபத்துகளை தடுக்கும் பொருட்டு,கல்லுாரி நேரங்களில் அதிகப்படியான அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் பஸ்கள், அதன் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.