கோவை;கோவை டிரான்ஸ்பார்மர் நிறுவனத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செப்புக்கம்பி திருடிய, 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கோவை, பீளமேடு கே.ஆர். புரத்தை சேர்ந்த வரதராஜன், ஏ.பி.துர்கா டிரான்ஸ்பார்மர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். ஜன., 28 இரவு இந்நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, 1,440 கிலோ செப்புக்கம்பிகளை திருடிச்சென்றனர்; அதன் மதிப்பு, 15 லட்சம் ரூபாய்.
இவர்களை பிடிக்க, கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, துணை கமிஷனர் சிலம்பரசன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில், செப்புக்கம்பி திருடிய, 9 பேர் கும்பல் அடையாளம் காணப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாமிக்கவுண்டம்பாளையத்தில் லிங்கம் மெட்டல்ஸ் என்ற பெயரில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் ஜோதிலிங்கம், 25, ஒரு கும்பலுடன் இணைந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கேரளா, அட்டப்பாடி ஆனந்தகுமார், 27, திருப்பூர் ராயபுரம் அமீர் பாஷா, 24, சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் சூர்யா, 23, பொள்ளாச்சி திவான்சாபுதுார் பிரபு, 22, ஒண்டிபுதுார் அன்னை சத்யா நகர் செந்தில் குமார், 32, மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகர் பிரகாஷ், 42, காமாட்சிபுரத்தை சேர்ந்த, 17 வயது வாலிபர், காரமடை மருதுாரை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் திருடி வரும் பொருட்களை ஜோதிலிங்கம் வாங்கிக்கொள்வது வழக்கம்.
அதை விற்று கிடைக்கும் பணத்தில், கொள்ளை கும்பலுக்கு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று ஜோதிலிங்கம் தலைமையில், சரக்கு வாகனத்துடன் சென்ற, 9 பேரும் டிரான்ஸ்பார்மர் கம்பெனி பூட்டை உடைத்து செப்புக்கம்பி திருடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 9 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில், ஆனந்தகுமார், 11 திருட்டு வழக்கிலும், ஆனந்த், 3 திருட்டு வழக்கிலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.