மதுரை: 'மதுரை மாநகராட்சி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சேமநலநிதி(பி.எப்.,) ரூ.20.05 கோடி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மழுப்பல் பதில் அளித்தால், அதுபற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் 96 பள்ளிகள் உள்ளன. இதில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 438 பேரிடம் 1.4.1990 முதல் 31.3.2019 வரை ரூ. 20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் இத்தொகை மாநில கணக்காயர் (ஏ.ஜி.,) பரிந்துரைப்படி எந்த வங்கியிலும் 'டெபாசிட்' செய்யப்படவில்லை.
ஆனால் 1.4.2019க்குபின்னரே இந்த 438 பேருக்கும் பி.எப்., பிடித்தம் செய்ததற்கான ஆவணங்கள், வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளன. இடைப்பட்ட 29 ஆண்டுகளாக பிடித்தம் செய்த தொகைக்கு எவ்வித விவரமோ, ஆவணமோ இல்லை.
இதுகுறித்து மாநகராட்சி ஆசிரியர் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு 'இந்த தொகையை சிறப்பு நிதி, மானியம் அல்லது கடனாக வழங்க கோரி நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து தொகை வந்தவுடன் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்வோம்' என பதில் அளித்துள்ளனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாநகராட்சியிடம், 'எந்த வங்கிகளிலும் டெபாசிட் செய்யப்படாத அத்தொகை எந்த கணக்கில் தற்போது உள்ளது.
எவ்வித கணக்கும் இல்லையென்றால் அத்தொகை எந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டது' என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 'இக் கேள்விகள் ஆர்.டி.ஐ., வரம்பிற்கு உட்பட்டதல்ல' என்று மட்டும் பதிலாக அளிக்கப்பட்டுள்ளது.
சீனிவாசகன் கூறியதாவது:
ஆசிரியர்களிடம் 29 ஆண்டுகளாக பிடித்த ரூ. பல கோடி பி.எப்., தொகை எங்கே என்ற விவரமே மாநகராட்சியில் இல்லை. இதுகுறித்த ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கும் மாநகராட்சி மழுப்பலாகவே பதில் அளித்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகை உரிய முறையில்டொபாசிட் செய்யப்படாததால் முன்பணம், கடன் வசதி பெற முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அத்தொகை எந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் கூட இல்லாமல் மர்மமாக உள்ளது.
தொகை எங்கே, எதற்காக பயன்படுத்தப்பட்டதுஎன மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.