மேலுார் : மேலுார் பகுதியில் கீழவளவு, வெள்ளலுார் கொள்முதல் மையங்களைத் தொடர்ந்து, அட்டப்பட்டியிலும் நெல் கொள்முதல் செய்யாததால் மூவாயிரம் நெல்மூடைகள் வீணாகி வருகின்றன.
மேலுார் பகுதியில் கொள்முதல் மையம் அமைக்க தாமதம், மழையால் பல ஆயிரம் டன் நெல்மணிகள் நனைந்து வீணாகின. இதேபாதிப்பு அட்டப்பட்டி மையத்திலும் நெல்மணிகள் வீணாயின.
இப்பகுதியில் 1,800 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நுகர் பொருள் வாணிபக்கழகம் இங்கு ஆண்டுக்கு 2 முறை நெல் கொள்முதல் நடைபெறும். ஜன.,31 ல் இடத்தை தேர்வு செய்த வாணிப கழக அதிகாரிகள் உடனே கொள்முதல் செய்வதாக அறிவித்தனர்.
எனவே, விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் இதுவரை அவற்றை கொள்முதல் செய்யவில்லை.
விவசாயி முருகன் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து நெல்லை விளைவித்தோம். அவற்றை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து, ஒருவாரமாக இரவு, பகலாக காத்துக் கிடக்கிறோம்.
இதுவரை கொள்முதல் துவங்காததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேங்கிகிடக்கின்றன.
இங்கு நெல் இடமில்லாததால் 800 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை செய்யாமலும் உள்ளது.
அறுவடை தாமதமானால் நெல்லை அரைக்கும்போது அரிசியாக வராமல் குருணையாக நொறுங்கிவிடும்.
எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நெல் கொள்முதலை உடனே துவங்க வேண்டும், என்றார்.