கொட்டாம்பட்டி : பட்டமங்கலப்பட்டியில் உடைகல் குவாரி துவங்குவதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
கருங்காலக்குடி, அய்யாபட்டியில் உடைகல் குவாரி துவங்க, பட்டமங்கலப்பட்டியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார்.
ஒரு தரப்பினர், '200 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தால் அனுமதியளிக்கலாம்' என்றனர். இதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் செல்வராஜ், தங்கம், அடைக்கண், ஜீவா, ரவி, அன்பழகன் அரசு விதிகளை பின்பற்றி அனுமதியளிக்க வேண்டும் என்றனர்.
சிலர், 'கனிமவள விதிகளை வகுத்த அதிகாரிகளே விதி மீறி அனுமதி கொடுக்கின்றனர். குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதித்து விவசாயம் அழியும்.
சுற்றுச்சூழல், காற்று மாசுபடும். சுற்றிலும் குளங்கள், வீடுகள் உள்ளதால் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்றனர்.
கலெக்டர் கூறுகையில், ''இரு தரப்பு கருத்துக்களையும் பரிசீலனை செய்து குவாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார்.
ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் சரவணபெருமாள், டி.எஸ்.பி., ஆர்லியஸ் ரெபோனி, கனிமவள உதவி இயக்குநர் அண்ணாத்துரை, உதவி புவியிலாளர் தெய்வஅருள் பங்கேற்றனர்.