ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் கடந்த மாதம், 20ம் தேதி முதல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கு நின்று சோதனை, வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
உரிய ஆவணம் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகவும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள், மது, பிற பொருட்கள் கொண்டு சென்றால், பறிமுதல் செய்கின்றனர். இதனால் கடந்த இரண்டு வாரமாக ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், வியாபாரம் வெகுவாக சரிந்து விட்டது.
மக்கள், வியாபாரிகள், மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோர், பணம் எடுத்து வரவும், ஜவுளிகளை வாங்கி செல்வதையும் தவிர்த்துள்ளனர். இதனால் கனி மார்க்கெட் வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது பனி கால ஆடைகள், காட்டன், இரவு ஆடைகள், பெட்ஷீட், மெத்தை உறைகள், துண்டு, லுங்கி, வேட்டி அதிகம் விற்பனையாகும். இரு வாரமாக, 30 சதவீத விற்பனை கூட நடக்கவில்லை என வியாபாரிகள் புலம்பினர்.