டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் ஒன்றியம், கொங்கர்பாளையம் ஊராட்சி, கவுண்டன்பாளையம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், கல்குவாரி அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து சுற்றுவட்டார பகுதி மக்களிடம், கருத்து கேட்கும் கூட்டம் டி.என்.பாளையத்தில் நேற்று நடந்தது.
கோபி ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் வரவேற்றார். கல்குவாரி அனுமதி குறித்த திட்ட விளக்க உரையை, தர்மபுரியை சேர்ந்த கனிமவள சுற்றுச்சூழல் ஆலோசகர் வழங்கினார்.
ஊராட்சி பகுதி விவசாயிகள், மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கல்குவாரி அமைக்க ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவு செய்தனர். அப்போது இருதரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு உருவானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பங்களாப்புதுார் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரவர் தங்கள் கருத்துக்களை முன்வைக்க உரிமையுண்டு என்றனர். கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. உயரதிகாரிகளுக்கு அனுப்பி முடிவு செய்யப்படும் என்று கூறி, கூட்டத்தை முடித்தனர்.