அரசுப்பள்ளிக்கு சென்ற
முன்னாள் தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான சதாசிவம், அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நேற்று சென்றர். இந்தப்பள்ளியில் தான் அவர் படித்தார். ஆசிரியர்கள் அவரை வரவேற்றனர். தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டும், வகுப்பறைக்குள் அமர்ந்தும் பழைய நினைவுகளை, ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார். மாணவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை சந்தித்து, பள்ளிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசித்தார்.
தோட்டத்தில் பேட்டரி
திருடிய வாலிபர் கைது
பவானிசாகரை அடுத்த கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம். இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் தடுக்க, தோட்டத்தை சுற்றிலும் பேட்டரி மின் வேலி அமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் மின்சாரம் பாய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இன்வெர்ட்டர் மற்றும் இரண்டு பேட்டரிகள் திருட்டு போனது. செல்வம் புகாரின்படி பவானிசாகர் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக பவானிசாகர், கிரசர்மேட்டை சேர்ந்த ராம்குமார், 21, என்பவரை போலீசார் கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, சத்தி சிறையில் அடைத்தனர்.
இளம்பெண் தற்கொலை
பெருந்துறையை அடுத்த கம்பிளியம்பட்டி, காசிலிங்க கவுண்டன் புதுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி கவுரி மீனா, 27; தம்பதியருக்கு மூன்று வயதிலும், ௪௫ நாட்களேயான பெண் குழந்தை என இரு குழந்தை உள்ளது.
குழந்தை பிறந்ததால், சக்கரைகவுண்டன்பாளையத்தில் பெற்றோர் வீட்டில் இருந்த கவுரி மீனா, கடந்த வாரம்தான் கணவர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், படுக்கை அறையில் துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.
கார்பென்டர், மூதாட்டி
சடலம் வாய்க்காலில் மீட்பு
கோவை, போத்தனுாரை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரேம்குமார், 40; கோவையில் கார்பென்டர் வேலை செய்து வந்தார்.
கொடிவேரி தடுப்பணை பகுதியில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தார், உறவினர்களுடன் குளித்தார். மீண்டும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளித்த போது மாயமானார். இரண்டாவது நாளாக நேற்று காலை தேடும் பணி நடந்தது. அவர் குளித்த இடத்தில் இருந்து, ௧௦௦ அடி தொலைவில், பாறை இடுக்கில் சிக்கியிருந்த பிரேம்குமார் சடலத்தை, சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.
இதேபோல் பெரிய கொடிவேரி, அரக்கன் கோட்டை வாய்க்காலில், நேற்று காலை பெண் சடலம் மிதந்தது. பங்களாப்புதுார் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். இதில் சத்தி அருகே சதுமுகை, நடுப்பாளையம் சாலை சீதாலட்சுமி, 60, என்பது தெரிந்தது. உடல்நிலை சரியில்லாத அவர், வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
சக்தி மசாலா ஐம்பெரும் விழா
ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின், சக்திதேவி அறக்கட்டளையின், 23-வது ஐம்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. சாந்தி துரைசாமி தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி வரவேற்றார். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பொது வாழ்வில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், சக்தி தேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார் பெங்களூரு வாசவி மருத்துவமனை கவுரவ செயலர் ஸ்ரீராமுலு, சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பேசினார்.
அரிமா சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் முத்துசாமி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர். விழாவில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி உதவித்தொகை என, ஒரு கோடியே, 24 லட்சத்து, 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
தவறி விழுந்த கட்டட தொழிலாளி மரணம்
புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுார் கே.வி.கே., வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 62, கட்டட தொழிலாளி. புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை அருகே கோவை கார்டன் பகுதியில், கட்டட பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது மனைவி நாகமணி, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளார். அதில், 'தகுந்த பாதுகாப்பு உபகரணங்களின்றி கட்டடப்பணி மேற்கொண்டனர். மேஸ்திரி தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'போக்சோவில்'
டிரைவர் கைது
நம்பியூர் அருகேயுள்ள சங்கம்பாளையம், காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 28; போர்வெல் லாரி டிரைவர். கடந்த ஆண்டு நவ., மாதம், 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து பெண்ணின் தாயார், நம்பியூர் போலீசில் புகாரளித்தார். இதன்படி இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருவரும் சிக்கினர். போக்சோ வழக்கில் ஆனந்தகுமாரை கைது செய்த போலீசார், கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தேர்தல் பார்வையாளர்
போன் எண் வெளியீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.
தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை இவர்கள் கண்காணிப்பாளர்கள். இவர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இதன்படி, பொது தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் - 70944 88456, தேர்தல் செலவின பார்வையாளர் கவுதம்குமார் - 70944 88636, போலீஸ் பார்வையாளர் சுரேஷ்குமார் சந்தேவ் - 70944 88543 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இத்தகவலை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
'ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்'
தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிமீறி கொடிக்கம்பம் அமைத்து, தோரணம் தொங்க விட்ட, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு, அசோகபுரம் பகுதியில், தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டனர். இதற்காக சாலையோரம் கட்சி கம்பம் நட்டு, கொடிகளை தோரணமாக சாலை நடுவே கட்டினர்.
போலீசார் சுட்டிக்காட்டியும் கம்பம், தோரணங்களை அகற்றவில்லை. இந்நிலையில் இந்த விதிமீறல் தொடர்பாக, கருங்கல்பாளையம் போலீசார், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், யாருடைய பெயரையும் வழக்கில் அடையாளப்படுத்தி சேர்க்கவில்லை.
ஸ்டாலின் 24, 25ல் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும், 24, 25ல் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதன்படி, 24ல் வெட்டுக்காட்டுவலசு, சம்பத் நகர், பெரியவலசு, காந்தி நகர் குளம் பகுதி, அக்ரஹாரம் நெறிக்கல்மேடு, சத்யா நகர், வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், ராஜாஜிபுரம், எல்லை மாரியம்மன் கோவில் பகுதி, முத்துசாமி வீதி, பழனிமலை கவுண்டர் வீதி போன்ற இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
25ம் தேதி டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை, ஜெகநாதபுரம் காலனி, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்கபெருமாள் கோவில் வீதி வழியாக கள்ளுக்கடைமேடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, சமாதானம்மாள் சத்திரம், மண்டப வீதி வழியாக காரைவாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், மணிக்கூண்டு, அசோகபுரி, நேதாஜி சாலை, சென்ட்ரல் தியேட்டர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
தான்தோன்றியம்மனுக்கு
சந்தனக்காப்பு அலங்காரம்
கெட்டிச்செவியூர் தான்தோன்றியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் கோலாகலமாக நடந்தது.
நம்பியூர் அருகே கெட்டிச்செவியூரில் உள்ள தான்தோன்றியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, கடந்த ஜன.,25ல்,
பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு மூன்று கிலோ சந்தனத்தில், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை அதிகாலை அம்மை அழைத்தலை தொடர்ந்து, ௭:30 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது.
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்
மாநில ஹாக்கியில் இரண்டாமிடம்
பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில், மாநில அளவில் பாலிடெக்னிக் கல்லுாரிளுக்கு இடையில், ஹாக்கி போட்டி நடந்தது. இதில், 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் நெல்லை லட்சுமியம்மாள் அணி, சீனாபுரம் கொங்கு வேளாளர் அணிகள் மோதின. இதில் நெல்லை அணி பட்டம் வெற்றது. சீனாபுரம் அணி இரண்டாமிடம் பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரி தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மதுசூதா பேகம், பரிசு வழங்கினார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர்கள் ஓம்பிரகாசம், பொன்சங்கர் செய்தனர்.
ஈரோடு-பழநி ரயில் பாதை
தாராபுரம் மக்கள் மகிழ்ச்சி
மத்திய ரயில்வே பட்ஜெட்டில், ஈரோடு-பழநி ரயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், தாராபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாராபுரம் நகராட்சி பகுதியில், 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆனாலும், தொழில் வளர்ச்சி அடையாத நிலை உள்ளது.
இதற்கு ரயில் பாதை இல்லாததும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால் ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழநிக்கு, ரயில் பாதை அமைக்க, மறைந்த லிங்கம் சின்னச்சாமி தலைமையில் ரயில் பாதை இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வந்தது.
தற்போது அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், 91 கி.மீ.,க்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாராபுரம் பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
குழந்தையுடன் தாய் தற்கொலை
பு.புளியம்பட்டியில் அதிர்ச்சி
புன்செய்புளியம்பட்டி அருகே, குடும்ப தகராறில், குழந்தையுடன் தாய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகே, நேருநகர் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 38, கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சரிதா, 30; தம்பதயிரின் மகன் பவன் கிருத்திக், ௩; கணவன், மனைவி இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கமாக செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை அழைத்தும் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து செல்வராஜ் உள்ளே சென்றார்.
மனைவி மற்றும் மகன், மின்விசிறியில் ஒரே சேலையில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புன்செய்புளியம்பட்டி போலீசார் இரு சடலத்தையும் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் மட்டுமின்றி ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது. குடும்ப தகராறில், குழந்தையுடன் துாக்கிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்கள் மத்தியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மின் நுகர்வோர்
குறைதீர் கூட்டம்
தாராபுரம் பகுதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. மின் நுகர்வோர் இதில் பங்கேற்று, தங்களது குறை கூறி தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய வண்ணமயில்
கும்மியாட்ட கலை நிகழ்ச்சி
காங்கேயம், பிப். 8-
சிவன்மலை தைப்பூச தேர்திருவிழாவையொட்டி, காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் சார்பாக பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தது.
சிவன்மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய திடலில் நடந்த நிகழ்வில், 75 பெண்கள் பங்கேற்ற ஒயிலாட்டம், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பெருஞ்சலங்கையாட்ட நிகழ்வை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தொடங்கி வைத்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தனர்.
இதில், 55 பேர் வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்றம் செய்தனர். பெண்களுடன் சிறுமிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தினர் செய்தனர்.