கரூர்: கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாயமான 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் அருகே தோரணகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 61. இவரது மகள் சவுமியா, 28, நான்கு மாத குழந்தை சாஷிகாவுடன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சக்திவேல் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர், வெங்கமேடு, காமராஜ் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, 45; இவரது மனைவி சத்யா, 43; டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்வதாக, கூறி விட்டு சென்ற சத்யா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை வெங்கமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சத்யாவை தேடி வருகின்றனர்.
கரூர், கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி, 35; பெயின்டர். இவருக்கு சுதா, 32; என்ற மனைவியும், சித்தார்த், 7, தவுசிக், 4; ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இரவு, வீட்டில் இருந்து, வெளியே சென்ற சுதா மற்றும் குழந்தைகளை காணவில்லை என, ராஜாஜி, கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மாயனுரை அடுத்த, சித்தலவாய் பஞ்., மேலமுனையனுாரை சேர்ந்தவர் ராஜாமணி, 45. கூலி தொழிலாளி. இவரது மகள் திவ்யா, 23, கரூரில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்து வந்தார்.
கடந்த 3ம் தேதி காலை முதல் திவ்யாவை காணவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜாமணி மாயனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, திவ்யாவை தேடி வருகின்றனர்.