கழிவுநீர் வாய்க்காலை
துார் வார கோரிக்கை
கரூர் - திருச்சி சாலையில் கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன்
அலுவலகம் அருகே, கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில்
கழிவுநீர் வாய்க்காலில், செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.
மேலும், வடிகாலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கி, மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதேபோல், மழை பெய்யும் போது, மழைநீரும் சாலையில் செல்லும்
நிலை உள்ளது. எனவே, கழிவுநீர் வாய்க்காலை துார்வார
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் மண் குவியலை
அகற்ற வலியுறுத்தல்
கரூர், காந்தி கிராமம் வழியாக நாள்தோறும் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரூர் - திருச்சி சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளது. அவ்வப்போது, காற்று வீசும் சமயத்தில் புழுதி பறப்பதால்,
வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக,
டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து படுகாயமடைகின்றனர். எனவே, காந்தி கிராமம் பகுதியில் சாலையில் தேங்கிய மண் குவியலை அப்புறப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த நிழற்கூடத்தால்
பயணிகளுக்கு ஆபத்து
கரூர் அருகே மூர்த்திபாளையம் சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி பயணிகளுக்காக மேல் ஒரத்தை பிரிவு பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது.
தற்போது, இந்த நிழற்கூட கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால்,
பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், திறந்தவெளி பகுதியில் நின்றுகொண்டு, பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலம் நெருங்கும் நிலையில், மேல் ஒரத்தை பிரிவு சாலையில் சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தரகம்பட்டியில் சிறப்பு
வேலைவாய்ப்பு முகாம்
கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் வட்டார அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமுக்கு ஒன்றிய ஆணையர் ராணி தலைமை வகித்தார். இதில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த வேலை வாய்ப்பு கலந்தாய்வில் கடவூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து, 384 இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 47 பேர், வேலை வாய்ப்புக்கான பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நுாலகத்துக்கு மின் விளக்குகள்
அமைக்க கோரிக்கை
கிருஷ்ணராயபுரம் அருகே, நுாலகத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அப்பகுதியினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணராயபுரம் அருகே, வீரியம்பாளையத்தில், நேரு யுவகேந்திராவுடன் இணைந்து சமுதாயத்தில் பல சேவைகள் செய்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள முத்தம்பட்டியில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மாணவ, மாணவியர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் போதிய மின் விளக்குகள் இங்கு இல்லை. எனவே, நுாலகத்தில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தரகம்பட்டி யூனியன் அலுவலகம் முன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். தற்போது பணியாற்றி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை, தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, 50 சதவீதம் என்ற வீதத்தில் பணிமூப்பு அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், சங்க நிர்வாகிகள் மலைக்கொழுந்தன், பெத்தகுட்டி, ஏழுமலை, ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின் ஊழியர் மீது தாக்குதல்
3 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை அருகே, கள்ளை பஞ்., மணியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணி, 45. இவரது மகன் நவீன்குமார், 25. நெய்தலுார் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த ஜன., 25ம் தேதி இரவு, கள்ளை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர், கல்யாணியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பிரச்னை தொடர்பாக பேச வேண்டும் என கூறி, நவீன்குமாரை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வருமாறு கூறினார். அதன்பேரில் கல்யாணியும், நவீன்குமாரும் அங்கு சென்றனர். அப்போது, துரை, அவரது மனைவிகள் அகிலாண்டேஸ்வரி, சத்தியலட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நவீன்குமாரை கட்டி வைத்து தாக்கினர். தடுக்க சென்ற உறவினர் பாலகிருஷ்ணன், 36, என்பவரையும் தாக்கினர். இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில், துரை, அகிலாண்டேஸ்வரி, சத்தியலட்சுமி ஆகிய மூவர் மீதும் தோகைமலை போலீசார் வழக்குப் பதிந்து
விசாரிக்கின்றனர்.
நெஞ்சு வலியால் எஸ்.ஐ., பலி
கரூர் அருகே, நெஞ்சு வலி காரணமாக போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புலியூர், செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 59; பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட செல்வராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய தொழிற்சங்க மைய (சி.ஐ.டி.யு.,) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ரயில்வே, மின்சாரம், போக்குவரத்து, அரசு கேபிள் டி.வி., குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், மாநில அரசு பணிகளில் 'சி' மற்றும் 'டி' பிரிவுகளில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது இல்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட, அனைத்து பணப்பயன்களையும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில சி.ஐ.டி.யு., செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா முகமது, கிருஷ்ணமூர்த்தி, தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
மணல் அள்ள அனுமதி கோரி மனு
காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என, மாயனுார் வட்டார மாட்டு வண்டி தொழிலாளர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கடந்த பல ஆண்டுகளாக காவிரி ஆற்றுப் பகுதியில் அரசு அனுமதியோடு மாட்டு வண்டியில் மணல் அள்ளி, உள்ளூர் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது, மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிழைப்புக்கு வழியின்றி வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள மீண்டும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரத்தில்
அரசு நிலம் மீட்பு
கிருஷ்ணராயபுரத்தில் முருகன் கோவில் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீட்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரத்தில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் முருகன் கோவில் அருகே அரசு நிலம் 28 சென்ட் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த நிலத்தை கண்டறிந்து மீட்கும் பணியில் கிருஷ்ணராயபுரம் வருவாய்த் துறை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். மேலும், மீட்கப்பட்ட அரசு இடத்தில் அளவீடு செய்யப்பட்டு, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நிலத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன.
குபேர மூலையில் பிரசாரம் துவக்கம்
எங்களுக்கே வெற்றி என்கிறார் 'மாஜி'
''குபேர மூலையில் பிரசாரத்தை துவக்கியுள்ளதால், வெற்றி எங்களுக்கே,'' என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக தென்னரசு உறுதியாகி, அதற்கான படிவங்கள் நேற்று காலை வந்தன. மனுத்தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர் படிவம், ஏ, பி படிவங்களை, மணல்மேடு முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் வைத்து அ.தி.மு.க.,வினர் வழிபாடு நடத்தினர்.
சிறப்பு பூஜைக்குப்பின், அங்கேயே பிரசாரத்தை துவக்கினர். அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: வேட்பாளர் தென்னரசின் முதற்கட்ட பிரசாரம், குபேர மூலையில் துவக்கியதால், வெற்றி, செல்வம் கிடைக்கும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல, இந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றி, திருப்புமுனையை பெற்றுத்தரும். இவ்வாறு கூறினார்.
தவறி விழுந்த கட்டட தொழிலாளி மரணம்
புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுார் கே.வி.கே., வீதியை சேர்ந்தவர் ராமசாமி, 62, கட்டட தொழிலாளி. புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை அருகே கோவை கார்டன் பகுதியில், கட்டட பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மனைவி நாகமணி, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளார். அதில், 'தகுந்த பாதுகாப்பு உபகரணங்களின்றி கட்டடப்பணி மேற்கொண்டனர். மேஸ்திரி தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
வீரியபாளையம் பஞ்.,ல்
வெறிநோய் தடுப்பூசி முகாம்
கிருஷ்ணராயபுரம் அருகே, வீரியபாளையம் பஞ்சாயத்து பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
வீரியபாளையம் பஞ்சாயத்து கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கண்டறிந்து, அவற்றுக்கு தேவையான வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாய்கள் வளர்ப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில், குளித்தலை கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன், நோய் கண்டறியும் பிரிவு உதவி இயக்குனர் லில்லிகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் கோகுல், கெளதம், கீர்த்திகா, இந்துமதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மது, கள் விற்ற 11 பேர் கைது
கரூர் மாவட்டத்தில் மது மற்றும் கள் விற்றதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் நேற்று முன்தினம் வாங்கல், பாலவிடுதி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக பாலகுருசாமி, 50; மருதமுத்து, 41; மலர்க்கொடி, 38; சிவகுமார், 33; கோபால், 53; காந்தம்மாள், 63; பொன்னுசாமி, 73; பிரியா, 40; அன்பழகன், 43; கள் விற்றதாக சேர்மன் துரை, 48; பழனியம்மாள், 61; ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 67 மதுபாட்டில்கள், 6 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
பள்ளி குழந்தைகளுக்கு பரிசு
கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பள்ளி குழந்தைகளிடையே திருக்குறள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மழலையர் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 15 குறள் முதல் 100 குறள் வரை ஒப்பிக்கும் போட்டி நடந்தது.
போட்டியை, மார்னிங் ஸ்டார் பள்ளி தலைவர் கந்தசாமி தொடங்கிவைத்தார். திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், பள்ளி உறுப்பினர்கள் சங்கர், ஜெயபால் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில், குறள் ஒப்பித்த குழந்தைகளுக்கு வெள்ளிக்காசு, திருவள்ளுவர் படம், பேனா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில், 100 குழந்தைகளுக்கு கேடயம், புத்தகப் பை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் அருண் கருப்புசாமி, துணை செயலாளர் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாய்க்கால் படித்துறையை
சீரமைக்க கோரிக்கை
கிருஷ்ணராயபுரம் அருகே, மேட்டுத்திருக்காம்புலியூர் கட்டளை மேட்டு வாய்க்கால் படித்துறையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே, மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, திருச்சி வரை கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் குறிப்பிட்ட இடங்களில் மக்கள் குளிப்பதற்காக படித்துறை கட்டப்பட்டுள்ளன. மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் படித்துறை படிகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், மேட்டுத்திருக்காம்புலியூர் வாய்க்கால் படித்துறையை சீரமைக்க அல்லது புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல்.,
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய பி.எஸ்.என்.எல்., சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கரூர் கிளை தலைவர் ராஜா தலைமையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு 4 ஜி, 5 ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு, மூன்றாவது ஊதிய உயர்வை வழங்க வேண்டும், புதிய பதவி உயர்வு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், கரூர் கிளை செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் நாராயணன், ஸ்ரீதர், சசிகலா, லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.