கரூர்: கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கு அரசு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி) அமைப்பு சார்பில் கொத்தடிமை ஒழிப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
கொத்தடிமை முறையை கண்டு, பொதுமக்கள் வருத்தப்படுவதும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவதும்போல் அலுவலர்கள் இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய மறுவாழ்வை பெற்று தர வேண்டும். அதற்காக, அரசு, அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. அதற்காக தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள், சட்டத்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கி பயிற்சி அளிக்கவுள்ளனர். அவற்றை அறிந்து, கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
கொத்தடிமை ஒழிப்பு தினம் நெருங்கி வரும் வேளையில், அலுவலர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று, மனிதனை மனிதன் சுரண்டாத, கொத்தடிமை தனம் இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ், சப் - கலெக்டர் சைபுதீன், ஆர்.டி.ஓ., ரூபினா, புஷ்பாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.