கரூர்: சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் நேற்று, கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம்
நிலவரப்படி வினாடிக்கு, 192 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 143 கன அடியாக குறைந்தது. சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, அமராவதி ஆற்றில் நீர்திறப்பு நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, 200 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 71.33 அடியாக இருந்தது.
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம், 4,030 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,896 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 17 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.89 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.