கரூர்: கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மின் தடை காரணமாக நேற்று தானியங்கி சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் சாலை மற்றும் திண்ணப்பா கார்னர் சாலைகள் பிரியும் இடத்தில், மனோகரா கார்னரில் நான்கு பகுதிகளிலும், தானியங்கி சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன.
கரூர் நகரில் மின் தடை ஏற்படும் போது, தானியங்கி சிக்னல்கள் செயல்படாது. பல ஆண்டுகளாக இந்ந நிலை உள்ளது. நேற்று கரூர் நகரில் துணை மின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
அப்போது, மனோகரா கார்னரில் தானியங்கி
சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் பஸ்களும், நெரிசலில் சிக்கி கொண்டன.
எனவே, மனோகரா கார்னர் பகுதியில் உள்ள சிக்னல்கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் வகையில் யு.பி.எஸ்., வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.