விதை நேர்த்தி செய்ய
விவசாயிகளுக்கு விளக்கம்
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், குள்ளாண்டிக்காடு கிராம விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தனியார் வேளாண் அறிவியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விதைகளை உப்பு நீரில் கலந்து குறிப்பிட்ட ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மேம்படுத்தும் முறையை மாணவர்கள் செய்து காண்பித்தனர். தொடர்ந்து மாணவர்கள் பேசும்போது, 'விதையை மேம்படுத்தும் முறையால் முதிர்ச்சி அடையாத விதைகளை அகற்ற முடியும். இதன் மூலம் நிலத்தில் விதை இடும்போது இடைவெளி இல்லாமல் நாற்றுகள் முளைக்க வசதியாக இருக்கும். தரமான விதையை பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் பெற முடியும்' என விளக்கினர்.
மா.திறனாளி மாணவர்களுக்கு
இலவச மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை வட்டார வள மையத்தில் உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம், கபிலர் மலையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மெகருநிஷா முன்னிலை வகித்தார். ஆசிரியர் கவிதா வரவேற்றார். கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல் முகாமை துவக்கி வைத்தார்.
இதில், 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு பார்வையின்மை, குறைபார்வை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, குள்ளத்தன்மை, அறிவு திறன் குறைபாடு, மனநோய், புற உலக சிந்தனை குறைபாடு, மூளை முடக்க வாதம், தசை சிதைவு நோய், மூளை நரம்பு சார்ந்த குறைபாடு, கற்றல் திறன் குறைபாடு, விழி திசு குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட குறைபாடு கொண்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
மது விற்றவர் மீது வழக்கு
சட்டவிரோதமாக மது விற்றவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
எருமப்பட்டி அருகே, அலங்காநத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் ஓட்டல் பின்புறத்தில் அரசு மதுபானத்தை வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மதுபானம் விற்பனை செய்த மருதமுத்து, 65, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சாலை விரிவாக்கத்துக்கு
ரவுண்டானா அகற்றம்
சாலை விரிவாக்கத்திற்காக, எஸ்.பி.பி., காலனி பகுதியிலிருந்த ரவுண்டானா அகற்றப்பட்டது.
பள்ளிபாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் சாலை விரிவாக்கம் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அகற்றப்பட்டது. அதேபோல் சாலையில் இருந்த மரங்களும் அகற்றப்பட்டன. நேற்று சாலையின் மையப்பகுதியில் இருந்த ரவுண்டானா மற்றும் சென்டர் மீடியன்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. தொடர்ந்து சாலை விரிவாக்கம் பணி விரைவாக நடந்து வருகிறது.
இருக்கூரில் அன்னதான கூடத்தில்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கபிலர்மலை அருகே இருக்கூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்னதான கூடத்தில் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் தைப்பூசத்தை முன்னிட்டு தனி நபர்கள் சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் என்ற பெயரில் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் சுகாதாரமற்ற தண்ணீரில் உணவு தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.
பொதுமக்களை நலன் கருதி அன்னதான கூடத்தில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிங்காரவேல், முருகன், செல்வகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது திறந்தவெளியில் உணவு தயாரித்து தயாரித்த பொருட்களை மூடி வைக்காமல் இருந்துள்ளது. மேலும் உணவு சமைப்பவர்கள் சுகாதாரம் இல்லாமல் இருந்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கினர்.
மானியத்தில் உளுந்து விதை
எருமப்பட்டி யூனியனில் நெல் பயிரிட்டு, அறுவடை செய்த விவசாயிகள், தற்போது உளுந்து பயிரிட்டால் மண் வளம் காக்கப்படுவதுடன் அதிக லாபம் ஈட்டலாம் என, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
எருமப்பட்டி யூனியனில் கடந்த புரட்டாசி மாத பட்டமாக அதிகளவில் நெல் பயிரிடப்பட்டது. இந்த நெற்பயிற்கள், தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், அறுவடைக்கு பின் குறைந்த செலவில் உளுந்து சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம். உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக உளுந்து விதைகள் ஏக்கருக்கு, 8 கிலோ வீதம், 50 சதவீத மானியத்தில் அல்லது 1 கிலோவுக்கு, 50 ரூபாய் வீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நெல் பயிரிட்டிருந்த விவசாயிகள் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்திருந்தால், களை இன்றி வயலை பாதுகாப்பதுடன் மண் வளத்தை பெறலாம். மேலும், அதிக லாபம் ஈட்ட முடியும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி
துருக்கி, சிரியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காக மோட்ச தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நாமக்கல் தியாகிகள் நினைவு ஸ்துாபி அருகில், நேற்று நடந்தது. ஆன்மிக இந்து சமய பேரவை தலைவர் ஏகாம்பரம், மத்திய அரசு வக்கீல் மனோகரன், மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் திருக்குறள் ராசா, நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன், நாமக்கல் ஜேசிஸ் முன்னாள் தலைவர் பிரணவ்குமார் உள்பட பலர் பங்கேற்று, மோட்சதீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.
அரசு பள்ளியில்
நாணய கண்காட்சி
குமாரபாளையம் அருகே, அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நாணய கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கண்காட்சி அமைப்பாளரும், முன்னாள் மாணவருமான தாமரைராஜ், பழங்கால நாணயங்கள், பல வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள், கடித வகைகள் குறித்து மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஏ., தலைவர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர், அப்பகுதி பொதுமக்கள் இந்த நாணய கண்காட்சியை கண்டு பயனடைந்தனர்.
சிறுத்தை புலி
மீண்டும் வேட்டை
ப.வேலுார் பகுதியில் சிறுத்தை புலி புகுந்து, கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வெள்ளாளபாளையம் விவசாயி பழனிவேல், 60, என்பவர் தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை வீட்டின் முன் கட்டி வைத்திருந்தார்.
அப்போது சிறுத்தை புலி ஆட்டுக்குட்டியை தாக்கி இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
5,700 மூட்டை பருத்தி
ரூ.1.65 கோடிக்கு விற்பனை
நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி, குவிண்டால் குறைந்தபட்சம், 6,569 ரூபாய், அதிகபட்சம், 8,461 ரூபாய்; டி.சி.எச்., ரக பருத்தி, குவிண்டால் குறைந்தபட்சம், 8,069 ரூபாய், அதிகபட்சம், 8,609 ரூபாய்; கொட்டு ரக பருத்தி, குவிண்டால் குறைந்தபட்சம், 3,500 ரூபாய், அதிகபட்சம், 7,900 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தம், 5,700 மூட்டை பருத்தி, 1.65 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இந்த பருத்தி மூட்டையை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
சிறுத்தை புலியை விரைந்து பிடிக்க
'மாஜி' அமைச்சர் தங்கமணி கோரிக்கை
'கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து குதறும் சிறுத்தை புலியை விரைந்து பிடிக்க வேண்டும்' என, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்கள் தங்கமணி, சேகர் உள்ளிட்ட கட்சியினர், கலெக்டர் ஸ்ரேயா சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
இருக்கூர் கிராமத்தில், சிறுத்தை புலி புகுந்து, கால்நடைகளை பிடித்து கடித்து குதறி அட்டகாசம் செய்து வருகிறது. அதனால், சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என்பதற்காக, நாமக்கல் கலெக்டரை சந்தித்து மனு அளித்தோம். பொதுமக்கள் மிகவும் பயந்துள்ளனர். சிறுத்தை புகுந்துள்ள கிராமத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தோம். அவர்கள் சொல்வதையெல்லாம், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.