நாமக்கல்: முதல்வர் கோப்பைக்கான கபடி, நீச்சல், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 1,311 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வரும், 15 வரை, பள்ளி, கல்லுாரி, பொது பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கிறது.
ஐந்தாம் நாளான நேற்று, பள்ளி மாணவியருக்கான கபடி, கூடைப்பந்து போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு, சிலம்பம், மேசைப்பந்து போட்டியும், கல்லுாரி மாணவர்களுக்கு நீச்சல் போட்டியும் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட பயிற்சியாளர் கோகிலா, உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலம்பம் போட்டியில், 331 மாணவர்கள், நீச்சல் போட்டியில், 24 கல்லுாரி மாணவர்கள், மேசைப்பந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவில், 50 பேர், கூடைப்பந்து போட்டியில், 31 அணியை சேர்ந்த, 558 பேர், கபடி மாணவியர், 29 அணியில், 348 பேர் என, மொத்தம், 1,311 பேர் பங்கேற்றனர்.
அதேபோல், இறகுப்பந்து போட்டியில், 120 பேரும், வாலிபால் போட்டியில், 9 அணிகளை சேர்ந்த, 108 பேரும் என, மொத்தம், 628 மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே, 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். அனைத்து போட்டிகளிலும், வெற்றி பெறுபவர்களுக்கு, மொத்தம், 41.58 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.