ஈரோடு: கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார். இதற்கான படிவங்கள் விமானத்தில்
வந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் இருதரப்பினரும் மனு செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இறுதியாக வேட்பாளர் தென்னரசு அறிவிக்கப்பட்டார்.
இதனால், பன்னீர் அணி வேட்பாளர், இன்று வேட்பு மனுவை வாபஸ் பெறவுள்ளார். இந்நிலையில் தென்னரசு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம், நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளராக அவரது மனைவி பத்மினி மனுத்தாக்கல் செய்தார். மனுத்தாக்கலில், பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
பா.ஜ.,வுடன் கூட்டணி என நாங்கள் கூறவில்லை. எங்களுக்கு ஆதரவு தருவதாக, பா.ஜ., கூறி வருகிறது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், பா.ஜ.,வுடன் கூட்டணி என வெளிப்படையாக கூறவில்லை.
கிழக்கு தொகுதியில் அதிகமாக சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளதால், பா.ஜ.,வை பிரசாரத்துக்கு அழைப்பது குறித்து முடிவு செய்யவில்லை. வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுவுடன் வழங்க வேண்டிய படிவம் ஏ, பி ஆகியவற்றை, சென்னையில் இருந்து தனி பிரதிநிதி மூலம் விமானத்தில் அனுப்பி வைத்தனர். கோவை வந்த அவரை, மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் சென்று அழைத்து வந்தனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு; அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டு வழங்கிய,' ஏ, பி' படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கப்பட்டது. அதேபோன்ற படிவம், மாற்று வேட்பாளரான பத்மினிக்கும் தரப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.