தர்மபுரி: ஈரோடு இடைத்தேர்தலில், மக்கள் பணம் பெறாமல் வாக்களிக்க வலியுறுத்தி தர்மபுரியிலிருந்து, வாக்காளர் விழிப்புணர்வு இயக்க பிரச்சாரகர் ஒருவர் விழிப்புணர்வு நடைபயணத்தை துவக்கினார்.
மதுரையை சேர்ந்தவர், அகில இந்திய காந்திய இயக்க தேசிய செயலாளர் கருப்பையா, 53; வாக்காளர் விழிப்புணர்வு இயக்க பிரச்சாரகருமாக உள்ள இவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் பெறாமல், மக்கள் ஓட்டளிக்க வலியுறுத்தி, தர்மபுரி அடுத்த பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலிருந்து, தன் விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கினார். நேற்று தர்மபுரி வந்த அவருக்கு, லீட்ஸ் இயக்குனர் ஞானபிரகாசம், ரோட்டரி நிர்வாகிகள் குமார், குணசேகரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 99 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணம் மற்றும் நடைபயணம் மேற்கொண்டேன். இதற்கு சாத்தியம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மக்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல், ஓட்டு போட்டால், மதுவிலக்கு சாத்தியமாகும் வாய்ப்பு உள்ளது. இதனால், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், பணம் கொடுக்காமல் அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிக்க வேண்டும். பணம் வாங்காமல், மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.